காத்மண்டு: நேபாளம் – சீனாவை இணைக்கும் மிடேரி நட்பு பாலம், கடந்த இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டதால், 6 சீனர்கள் உட்பட 18 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் நேபாளத்தில் உள்ள போத்தேகோஷி ஆற்றிலும் காணப்படுகிறது. அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் அமைந்துள்ள மிடேரி நட்பு பாலம் முற்றாக சேதமடைந்துள்ளது.
மாயமானவர்களை தேடும் பணி தொடர்கிறது
வெள்ளத்தில் 18 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் சீன பிரஜைகள் என்றும், மற்றவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சொத்துநஷ்டமும் அதிகம்
வெள்ளப் பெருக்கில், பல வீடுகள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான சொத்துகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு சடலங்கள் மீட்பு
மேலும், நேபாளத்தின் தாட்லிங் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அதிகாரிகள் வெளியிட்ட எச்சரிக்கை:
மேலும் கனமழை ஏற்பட்டால், நிலச்சரிவும் ஏற்பட்டிடலாம் எனும் எச்சரிக்கையுடன், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணிகள் தொடரும் நிலையில், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.