எகிப்தின் ராஸ் கரீப் துறைமுகம் அருகே செங்கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த கப்பல், திடீரென கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 3 பேர் இதுவரை காணவில்லை.
விபத்து விவரம்:
மொத்தம் 30 ஊழியர்கள் பணியாற்றிய அந்த கப்பல், நேற்று முன்தினம் (ஜூன் 30) திடீரென கடலில் மூழ்கியது. விபத்து நடந்த உடனே மீட்பு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டன. உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாயமானவர்கள் தேடல் தொடர்கிறது:
மாயமான 3 ஊழியர்களை தேடும் பணி தொடரும் நிலையில், எகிப்து கடற்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் தொடர்ந்து கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சூயஸ் கால்வாயில் பாதிப்பு இல்லை:
சூயஸ் கால்வாய் ஆணையத் தலைவர் ஒஸாமா ரபி, “விபத்து நடந்த இடம், கால்வாயின் தெற்கு நுழைவாயிலிலிருந்து 130 கடல்மைல் தொலைவில் உள்ளது. எனவே, இந்தக் கப்பல் மூழ்கல் சூயஸ் கால்வாயில் சரக்கு போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
ஆளுநரின் விளக்கம்:
செங்கடல் மாகாண ஆளுநர் அமீர் ஹனாபி கூறியதாவது: “மாயமானவர்களை கண்டுபிடிக்க கடற்படையினர் தீவிரமாக தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன” என்றார்.
இந்த விபத்து எண்ணெய் துறையில் வேலை செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. விரைவில் மாயமானவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி