சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள கோயில் வளாகத்தில், தனிப்படையினரால் நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் என்ற வாலிபர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என கடுமையான உத்தரவுகளை காவல்துறைக்கு வழங்கினார்.
இதனடிப்படையில், மாநில டிஜிபி அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல் கமிஷனர்களுக்கு அவசர உத்தரவுகளை அனுப்பியுள்ளார். இதில், அங்கீகரிக்கப்படாத அனைத்து தனிப்படைகளையும் உடனடியாக கலைக்க வேண்டும் என்றும், இனி எந்தவொரு சந்தேகத்திற்கும் இரவு நேரத்தில் கைது செய்யவோ, காவல் நிலையத்துக்கு அழைத்து வரவோ கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமான கட்டுப்பாடுகள்:
- இரவு 7 மணிக்கு பிறகு புதிய கஸ்டடி எடுக்க அனுமதி இல்லை.
- ஸ்பெஷல் டீம்கள், எவரையும் கைது செய்ய உதவி கமிஷனர் அறியாமலே நடவடிக்கை எடுக்கக்கூடாது.
- விசாரணையின் போது உடல் ரீதியான தாக்குதல் செய்யக்கூடாது.
- தனிப்படையை அமைப்பதற்கு, உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் பரிந்துரை கட்டாயம் தேவை.
- அனுமதியில்லாத அனைத்து தனிப்படைகளும் கலைக்கப்பட வேண்டும்.
- விசாரணையில் பட்டியலான நடைமுறை உத்தரவுகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.
- கஸ்டடி வைக்கப்படும் போது, இன்ஸ்பெக்டர் நேரிலேயே இருக்க வேண்டும்.
உயர் காவல் அதிகாரி ஒருவர் தனது கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் மைக் மூலம் அறிவித்த உரையில், “முக்கியமாக இரவு 7 மணி பிறகு கஸ்டடி இருக்கக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட அந்த வழக்கில், டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார், மற்ற போலீசாரும் கைது செய்யப்பட்டனர். இப்போல தவறுகள் நடக்கக் கூடாது,” என எச்சரிக்கை அளித்துள்ளார்.
இவ்வாறான தீவிர நடவடிக்கைகள், காவல்துறையின் செயல்பாட்டில் பொறுப்பும், பொது மக்களின் உரிமைகளும் பாதுகாக்கும் நோக்கத்தில் மிக முக்கியமானதாகும்.
நன்றி